
இந்த ஃபாஸ்ட் ஃபுட் உலகில் நாம் அனைத்தையுமே விரைவாக பெற விரும்புகிறோம். ஆனால் இயற்கைக்கு என்று தனி கால அளவு உள்ளது அந்த காலத்தில்தான் இயற்கையான சில மாற்றங்கள் நடைபெறும். இயற்கையின் செயல்பாடுகள் சற்று தாமதமாக இருந்தாலும் நல்ல தரம் வாய்ந்ததாக இருக்கும். இந்த தாமதத்தை நாம் விரும்பாததால்தான் சில செயற்கையான விஷயங்களில் ஈடுபடுகிறோம். பொதுவாக ஒரு பொருளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பொழுது அதனின் தரம் சற்று குறையும்.

பழங்கள் மற்றும் காய்கறிகளை நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நமது உடல் நலத்தை மேம்படுத்துவதற்கு தான் நாம் இதை தேர்ந்தெடுக்கிறோம். ஆனால் இந்த நவீன உலகில் இவைகள் அனைத்தும் நமது உடலுக்கு பாதுகாப்பானதா? என்பதை பற்றி நாம் பெரிதும் கண்டு கொள்வதில்லை.
பொதுவாக காயாய் இருந்து பழமாக பழுப்பதற்கு இயற்கையாக எத்திலின் (ethylene) என்கிற வேதிப்பொருள் பழங்களில் சுரக்கும். இப்படி இயற்கையாக நடைபெறும் நிகழ்வில் தான் பழங்கள் பழுத்து சுவையானதாக மாறுகிறது.
ஆனால் சமீப காலமாக சிலர் வியாபார நோக்கத்திற்காக பழங்களை செயற்கையான முறையில் பழுக்க வைக்கிறார்கள் இப்படி பழுக்க வைக்க பயன்படுத்தும் வேதி பொருட்களால் உடல் நலத்திற்கு பக்க விளைவுகள் ஏற்படும் என்பதை நாம் யாரும் அறிவதில்லை. இப்படி செயற்கையாக பழுக்க வைக்க பயன்படும் வேதிப்பொருள்தான் ethephon. இந்த வேதிப்பொருளை ஸ்பிரே மூலமாக பழங்களில் தெளிப்பார்கள். இது பழங்களில் செயற்கையான முறையில் எத்திலின் என்கிற வேதிப்பொருளை உற்பத்தி செய்கிறது இதனால் பழங்களில் பழுத்தது போன்று தோற்றம் ஏற்படுகிறது.

இது
0.001% முதல் 0.01% சதவீதத்திற்குள்ளாக இந்த வேதிப்பொருளின் அளவு இருப்பின் இது பாதுகாப்பானது என்று உணவு மற்றும் விவசாயத் துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த அளவு மீறப்படும் பொழுது உடல் உபாதைகள் ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இம்மாதிரியான செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை தொடர்ந்து உண்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, பலமின்மை, தோல் வியாதி மற்றும் கல்லீரல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது. பொதுவாக இப்படி பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் வெளி தோற்றத்தில் பல பலவென இருந்தாலும் சுவை குறைவாகவே இருக்கும்.

இம்மாதிரியான ஆபத்துகளில் இருந்து தப்பிக்க உங்களின் விழிப்புணர்வு அவசியம்.
இந்த காலத்தில் நிஜம் எது போலி எது என்பதை ஆராய்வது சற்று சிரமமாக தான் உள்ளது. அதனால் பழங்களை விற்கும் வியாபாரிகளிடம் இயற்கையான முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் தானா என்பதை உறுதி செய்த பிறகு வாங்குவது சிறந்தது.
உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் உணவு பாதுகாப்பு துறையை அணுகுவது சிறந்தது. பழங்கள் வாங்கிய பிறகு அதை அப்படியே சாப்பிடாமல் நன்கு தண்ணீரில் ஊற வைத்த பின்னர் நன்றாக கழுவி பயன்படுத்துவது சிறந்தது.
இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் இதை மற்றவர்களுக்கும் பகிரவும்.
Reference:-
J Family Med Prim Care. 2018 Jan-Feb; 7(1): 179–183.
doi: 10.4103jfmpc.jfmpc_422_16
Kommentare